‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3

‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3
By: TeamParivu Posted On: January 09, 2024 View: 47

கரிமலையில் சூரியன் தயங்கியே உள்ளே புகுந்திருந்தான். சற்றே வாஞ்சையுடன் குளுமை மாறாது தன் கைகளை விரித்திருக்கிறான்.
கார் சூழ்ந்த கரி மலை எங்கள் ஐயப்பனின் இரண்டாம் ஆபரண தோரண வாயில். இன்னும் கடக்கவில்லை கரிமலையின் காலை 9 மணி. ஆபத்பாந்தவனுக்கு, அனாதை ரட்சகனுக்கு, மதகஜ வாகனனுக்கு அன்பொழுக, நடந்தது பக்தி பிரவாகமான பஜனை.
கரிவலம்தோடு பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் கிடையாது. சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த இடத்தில் யாரும் இரவில் தங்க மாட்டார்களாம். ஆற்றோரம் என்பதால் கூட்டம் கூட்டமாக வரும் யானைகளுடன் ஏனைய மற்ற வன விலங்குகளான புலி, சிறுத்தை, காட்டெருமை போன்றவைகளும் தண்ணீருக்காக தாராளமாக சஞ்சாரம் செய்யக்கூடிய அடர்வனம். அப்படியாகப்பட்ட இந்த இடத்தில் பகல் நேரத்தில் ஒன்றாகச் சேர்ந்து கூட்டமாக பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் சூரியன் பொழுது சாய்வதற்குள் விரைவாக நடந்து கரிவலம்தோடைக் கடந்து கரி மலை உச்சியினை அடைந்துவிடுவார்கள்.
அதற்கு இடைப்பட்ட நேரத்தில் மதிய பொழுதுகளில் கரிவலம்தோடுவில் சற்று இளைப்பாறி, பயமுறுத்தும் கரிமலை ஏற்றத்துக்கு தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். அவ்வளவுதான் கரிவலம்தோடுக்கும் பக்தர்களுக்குமான அதீத தொடர்பு.
அப்பேர்பட்ட அந்த கரிவலந்தோடு வனம் தான், பெய்த மழைக்கு மலையிலிருந்து இரவில் கீழிறங்கிய யானைகளிடம் இருந்து எங்களை காத்து கை தாங்கியிருந்து.
கரிவலம்தோடு இன்று காலமாற்றத்தினால் ஓரளவு மாறியிருக்கிறது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும், காடு எப்போதும் காடுதான். அந்தவகையில், இந்த சீஷன் நேரங்களில் மட்டும் கரிவலந்தோட்டின் ஆற்றின் கரைகளில் ஏராளமான விரிகள் விரிந்திருக்கின்றன. களைத்து வரும் பக்தர்கள் விரியில் விரித்துக் கிடக்கும் பாய்களில் அமர்ந்தோ அல்லது பிளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்தோ சூடாக பருகி, சாப்பிட கேரள கட்டாஞ் சாயா, வெங்காய வடையுடன் கிடைக்கிறது. பசிக்கும் வயிற்றிற்கு காலையில் கிழங்குடன் பூரியும், மதியத்தில் அரிசிக் கஞ்சியுடன் ஊறுகாயும் கிடைக்கிறது.
2020-ம் ஆண்டு யாத்திரையும் மறக்க முடியாதது. எங்கள் குழுவில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ல் மாலையிட்டு டிசம்பர் 15-ல் சபரிமலை யாத்திரை கிளம்பி விடுவோம். ஆனால் அந்த வருடம் மட்டும் நவம்பர் 15 மாலையிட்டு ஜனவரி 1-ம் தேதிக்கு மேல் மலைக்கு செல்கிறோம். பயணம் கிட்டத்தட்ட 9 நாட்கள் கொண்டதாக இருக்கிறது. எப்போதும் போல் எரிமேலி அன்றிரவு தங்கி, மறுநாள் காளைகட்டி வழியாக நடந்து குழிமாவில் தங்குவதாக திட்டம்.
2-ம் தேதி குழிமாவை அடைந்ததுமே பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. விரிக்கு ( விரி - தங்குமிடம் ) செல்வதற்கு முன்பான நான்கு முக்கு சந்திப்பில் பெரும் திரளாக பக்தர்கள் கூட்டமும், மக்கள் கூட்டமும் ஏதோ விபரீதத்தை உணர்த்தியது.
விசாரிக்கையில், முக்குழி வன பாதையில் குட்டியுடன் தாய் யானை ஒன்று நின்றுகொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டியிருக்கிறது. மலையாள விரிக்காரர்களும் யானையை விரட்ட பெரும்பாடு பட்டிருக்கிறார்கள். ஆனாலும், யானை அந்த இடத்தை விட்டு கிளம்புவதாக இல்லை. அதனால், முக்குழி வழியாக வனத்திற்குள் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நிறைய பேரை திருப்பி அனுப்பி கொண்டிருந்தார்கள்.

சரி. நமது பயணம் நாளைதான் என்பதால் அதற்குள் யானை இடம் மாறி சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் விரியில் தங்கிவிட்டோம்.
எல்லோரும் ஸ்ரீபாயில் வைக்கப்பட்டிருந்த இருமுடியை சுற்றி வந்து ஆயத்தமாகி, சூடமேற்றி ஆரத்தியில் வனதேவதைகளை வேண்டிய, ஒவ்வொரு ஐயப்பமார்களையும், குரு ஐயப்பன், பெயர் சொல்லி அழைக்க ஓடி நமஸ்கரித்து தலையில் இருமுடி தாங்கினோம். இருமுடி தாங்கியவர்கள் வரிசையாக நிற்க கடைசியாக குருநாதன் இருமுடி தாங்கி, ஆயுத்தமானதை ஐயப்பனுக்கு தெரிவிக்கும் வகையில், சுவாமியே சரணம் ஐயப்பா எனும் கோஷமிட்ட பொழுதினில், தென்னை மரத்திலிருந்து தேங்காய், விரியின் மேலிருந்த தகர செட்டின்மேல் பெரும் சத்தத்துடன் விழுந்து தரையில் உருண்டோடியது. தேங்காய் உணர்த்தியது உத்தரவா? எச்சரிக்கையா? வழியில் தெரிந்து விடும்.
ஐயப்பமார்களும் ஒருத்தரை ஒருத்தர் பிரியாது ஓருவர்பின் ஒருவராக வழியை விட்டுவிலகாது ஒட்டியே சவட்டுங்கள் என்று குரு வைத்தியநாத ஐயப்பன் கட்டளையிட, சரண கோஷம் வானை பிளந்தது. ஆயத்தமானது பயணம்.
எல்லைக் காவல் தெய்வத்திற்கு விடலையிட இரண்டு தேங்காய்களை கையில் ஏந்தி, அழுதா நதி பாலத்தைக் கடக்கிறேன்.
டோலிகள் அளவுக்கு, ‘சுமடுகள்’ எனும் ‘சுமை தூக்கிகள்’ பற்றி அதிகம் வெளியே தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படியான சுமடுகள் பற்றி நான் கட்டாயம் சொல்லியாக வேண்டும். டோலிகள் போலவே இந்த ‘சுமடுகள்’ இந்தப் பகுதிகளில் அதிகம் நிரம்பி வசிக்கிறார்கள். இவர்களுக்கான தொழிலே கரிமலை முழுவதும் ஆங்காங்கே விரிகள் போட்டிருப்பவர்களுக்காக பொருட்களைச் சுமந்து கொண்டுபோய் கொடுப்பது தான்.
இந்த இடத்தில் ‘சுமந்து’ என்கிற வார்த்தைக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுத்து மனதில் வரித்துக்கொண்டால்தான் அவர்கள் சுமக்கும் பாரத்தின் அழுத்தத்தை கொஞ்சுண்டாவது என்னால் உணர முடியும் என்று நினைக்கிறேன்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..